Tuesday, May 26, 2009

6. வாழ்க்கைத் துணைநலம்

6. வாழ்க்கைத் துணைநலம்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
(51)
விளக்கம்:

இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவி ஆவாள்.


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
(52)
விளக்கம்:

இல்லற வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்லற வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது நல்ல வாழ்வு ஆகாது.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
(53)
விளக்கம்:

மனைவி சிறந்தவளாக இருந்தால் ஒருவனுக்கு எல்லாம் கிடைத்ததாகப் பொருள். அதேசமயம், மனைவி சரியில்லாதவளாக இருந்தால் அவனுக்கு எந்தச் சிறப்பு கிடைத்து என்ன பயன்?

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுடன் டாகப் பெறின்.
(54)
விளக்கம்:

கற்பு என்னும் மன உறுதி மனைவியிடம் இருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்க ஒன்றை உலகில் காண முடியாது.

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
(55)
விளக்கம்:

காலை எழுந்ததும் தெய்வத்தைத் தொழுவதை விட தனது கணவனை தொழுது வாழும் பெண்கள், பெய் என்று சொன்னால் சட்டென மழை பெய்யும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
(56)
விளக்கம்:

தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணி, தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் இருப்பவளே பெண்.

சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
(57)
விளக்கம்:

சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர் 'நிறை' என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்.

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
(58)
விளக்கம்:

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்.

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
(59)
விளக்கம்:

புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி அமையாதவர்களுக்கு, இகழ்ச்சியாய் பேசுபவர் முன்னே தலை நிமிர்ந்து ஏறு போல் நடக்கும் பெருமித நடை இருக்காது.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
(60)
விளக்கம்:

மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம். நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.

No comments:

Post a Comment