Sunday, May 31, 2009

56. கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
(551)
விளக்கம்:

குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாக கொண்டவரினும் கொடியவனாவான்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
(552)
விளக்கம்:

அரசன் குடிகளிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், "எல்லாவற்றையும் தந்துவிடு" என்று கேட்பதைப் போன்றதாகும்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
(553)
விளக்கம்:

நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான்.

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
(554)
விளக்கம்:

மேல் நடப்பதைப் பற்றிக் கருதாமல், முறைதவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும் ஒருங்கே இழந்து விடுவான்.

அல்லற்பட் டாற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
(555)
விளக்கம்:

கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
(556)
விளக்கம்:

செங்கோன்மையால் தான் மன்னர்க்கு புகழ் நிலைக்கிறது. அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
(557)
விளக்கம்:

மழையில்லாத நிலைமை உலகத்திற்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவர்களுக்குத் துன்பம் தரும்.

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
(558)
விளக்கம்:

முறைப்படி ஆட்சிசெய்யாத மன்னவனின் கொடுங்கோலின் கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும் செல்வம் உடைமையே துன்பம் தரும்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
(559)
விளக்கம்:

ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப்போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின்.
(560)
விளக்கம்:

காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளமும் குன்றும்; அறு தொழிலோரும் மறை நூல்களை மறப்பார்கள்.

No comments:

Post a Comment