Sunday, May 31, 2009

68. வினை செயல்வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
(671)
விளக்கம்:

ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும். அவ்வாறு துணிவு கொண்ட பின் அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்.


தூங்குக தூங்கிச் செயற்பால் தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
(672)
விளக்கம்:

காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும். காலம் கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
(673)
விளக்கம்:

செய்யக் கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே. செய்ய இயலாத போது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்த பின்பே செய்தல் வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
(674)
விளக்கம்:

செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும், குறை விடாமல் செய்து விட வேண்டும். அவற்றின் மிச்சம் தீயின் ஒழிவைப் போலப் பெருகிப் பெருங்கேடு உண்டாக்கி விடும்.

பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
(675)
விளக்கம்:

வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.

முடிவும் இடையூறும் முற்றயாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
(676)
விளக்கம்:

செயலின் முடிவைப் பற்றியும், இடையில் வரும் இடையூறுகளைப் பற்றியும், முடித்தப் பின் அடையும் பெரும் பயனைப் பற்றியும் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்.
(677)
விளக்கம்:

ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவரிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும்.

வினையான் வினையாக்கி கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
(678)
விளக்கம்:

மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவது போல், பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும்.

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
(679)
விளக்கம்:

மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலிலே ஈடுபடுதல், நண்பருக்கு நல்லவை செய்வதிலும் மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும்.

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
(680)
விளக்கம்:

ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவருள், பயந்து இடையில் குறைப்பட்டவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அவர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment