Sunday, May 31, 2009

73. அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
(721)
விளக்கம்:

சொற்களின் தொகை பற்றி அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய் சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள்.


கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
(722)
விளக்கம்:

'கற்றவர்களுள் கற்றவர்கள்' எனப் புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர்.

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
(723)
விளக்கம்:

போர்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால் , கற்றோர் அவையிலே சென்று பேசக்கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச்சிலரே.

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
(724)
விளக்கம்:

தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும் படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாக கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியை கேட்டுக் கொள்ளல் வேண்டும்.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.
(725)
விளக்கம்:

அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும்.

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
(726)
விளக்கம்:

அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு அவர் நூலறிவாலும் பயன் இல்லை.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
(727)
விளக்கம்:

பகைவர் நடுவிலே புகுந்த, பேடியின் கையிலே உள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
(728)
விளக்கம்:

நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள் பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.
(729)
விளக்கம்:

தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர்கள் அவையிலே பேச அஞ்சுபவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
(730)
விளக்கம்:

அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே ஆயினும், அறிவற்றவர்களுக்கே சமமானவர்கள்.

No comments:

Post a Comment