Sunday, May 31, 2009

125. நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
(1241)
விளக்கம்:

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயானும்சொல்ல மாட்டாயோ?


காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.
(1242)
விளக்கம்:

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதாவராக இருக்க, நீ மட்டுமே அவரை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவதுபேதைமை ஆகும்.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
(1243)
விளக்கம்:

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்றுநினைக்கும் தன்மை இல்லையே.

கண்ணும் கொளச்சேரி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.
(1244)
விளக்கம்:

நெஞ்சமே, நீ அவரிடம் போகும்போது இக் கண்களையும் அழைத்துப் போவாயாக. அவரைக் காணவேண்டும் என்று இவைஎன்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
(1245)
விளக்கம்:

நெஞ்சமே, நாம் விரும்பி நாடினாலும் நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து அவரைக் கைவிடநம்மால் முடியுமோ?

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.
(1246)
விளக்கம்:

என் நெஞ்சமே, ஊடியபோது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய். பொய்யானசினம் கொண்டுதான் காய்கின்றாய்.

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.
(1247)
விளக்கம்:

நல்ல நெஞ்சமே, ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க என்னால் முடியாது.

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
(1248)
விளக்கம்:

என் நெஞ்சமே, நம் துன்பத்தை நினைந்து இரங்கிவந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கி, பிரிந்த காதலரின் பின்னாகச்செல்கின்றாயே, நீ பேதைமை உடையை.

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
(1249)
விளக்கம்:

என் நெஞ்சமே, காதலர் நம் உள்ளத்துள்ளேயே இருக்கும்போது, நீ அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச்செல்கின்றாயோ?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
(1250)
விளக்கம்:

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சத்திலேயே உடையவராய் நாம் இருக்கும்போதும், இன்னும் நாம் அழகிழந்து வருகின்றோமே.

No comments:

Post a Comment