Sunday, May 31, 2009

61. மடியின்மை

குடியென்னுங் குனறா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
(601)
விளக்கம்:

ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்படர, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்தும் போய்விடும்.


மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
(602)
விளக்கம்:

தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
(603)
விளக்கம்:

விலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பே அழிந்து விடும்.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
(604)
விளக்கம்:

சோம்பலிலே ஆழ்ந்து விட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
(605)
விளக்கம்:

சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம், என்னும் நான்கும், தாம் அழிந்து விடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
(606)
விளக்கம்:

நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை.

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
(607)
விளக்கம்:

சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
(608)
விளக்கம்:

நல்ல குடியிலே பிறந்தனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும்.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
(609)
விளக்கம்:

ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்து விட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கி விடும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
(610)
விளக்கம்:

சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்று விடுவான்.

No comments:

Post a Comment