Sunday, May 31, 2009

66. வினைத் தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
(651)
விளக்கம்:

துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே தரும். செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பிய எல்லாவற்றையுமே தரும்.


என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
(652)
விளக்கம்:

புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக் காலத்திலும் ஒருவன் செய்யாமல் நீக்கி விட வேண்டும்.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதுவும் என்னு மவர்.
(653)
விளக்கம்:

மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும்.

இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
(654)
விளக்கம்:

கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
(655)
விளக்கம்:

என்ன செய்தோம் என்று பின்னர் வருந்தக் கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது. செய்து விட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமல் இருப்பது நன்று.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
(656)
விளக்கம்:

தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தில் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(657)
விளக்கம்:

பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தைக் காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்தது ஆகும்.

கடிந்த கடிந்தொரர் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
(658)
விளக்கம்:

செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
(659)
விளக்கம்:

பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும். நல்ல வழியில் வந்தவற்றே இழந்தாலும் பின்னர் பயன் தரும்.

லத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
(660)
விளக்கம்:

தீய வழிகளாலே பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது, பசுமண் கலத்தினுள் நீரைப்பெய்து அதைக் கசியாமல் காப்பாற்றுவது போன்றதாகும்.

No comments:

Post a Comment