Sunday, May 31, 2009

90. பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
(891)
விளக்கம்:

மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது. அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும்.


பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.
(892)
விளக்கம்:

பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால் அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்து விடும்.

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
(893)
விளக்கம்:

தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதிநூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக.

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
(894)
விளக்கம்:

மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக் கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு கைகாட்டி அழைப்பதைப் போலாகும்.

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
(895)
விளக்கம்:

பகைவருக்கு வெய்யதான வலி மிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும் எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள்.

எரியாற் சுடப்பனும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
(896)
விளக்கம்:

காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப் பட்டாலும், ஒருவழியாக உயிர் பிழைத்து விடுவான். பெரியாரைப் பிழைத்து நடந்தவனுக்கு உய்வே கிடையாது.

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
(897)
விளக்கம்:

சாபமிடுதலும் அருள் செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால் பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும் பெரும்பொருளும் அழிந்து விடும்.

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் செறின்.
(898)
விளக்கம்:

குன்றுபோலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெட வேண்டும் என்ற நினைப்பார்களானால், தம் குடியோடு நிலை பெற்றார் போன்ற பெருஞ்செல்வரும் மாய்வார்கள்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
(899)
விளக்கம்:

உயர்ந்த விரதவாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும் அப்போதே அழிந்து போய்விடுவான்.

இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
(900)
விளக்கம்:

மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப் பெரிய சார்பு உடையவரானாலும் உய்ய மாட்டார்கள். அப்போதே அழிவார்கள்.

No comments:

Post a Comment