Sunday, May 31, 2009

47. தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
(461)
விளக்கம்:

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதியபின்னரே செய்ய வேண்டும்.


தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
(462)
விளக்கம்:

தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக்கூடயது யாதொன்றுமே இல்லை.

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
(463)
விளக்கம்:

வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.

தெளிவு இலதனைத் தொடங்கார் இழிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
(464)
விளக்கம்:

தமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒருபோதும் தொடங்க மாட்டார்கள்.

வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.
(465)
விளக்கம்:

ஒரு செயலைப்பற்றி எல்லா வகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
(466)
விளக்கம்:

செய்யத் தகுந்தது அல்லாத ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும். செய்யத்தகுந்த செயலைச் செய்யாமையாலும் கெடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
(467)
விளக்கம்:

நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; "துணிந்த பின்னர் எண்ணுவோம்" என்று எதையும் நினைப்பது குற்றமாகும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப் படும்.
(468)
விளக்கம்:

செய்வதற்கு உரிய வழிகளிலே முயன்று செய்யப்படாத தொழிலானது, பலர் துணை நின்று பின்னர்க் காத்தாலும் கெட்டுப் போய்விடும்.

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்நின்று
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.
(469)
விளக்கம்:

அவரவரது இயல்புகளைத் தெரிந்துகொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
(470)
விளக்கம்:

உயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள்.

No comments:

Post a Comment