Sunday, May 31, 2009

102. நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
(1011)
விளக்கம்:

இழிந்த செயல் காரணமாக நாணுதரே நன்மக்களது நாணம். பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் நாணம், குலமகளிரது நாணம் ஆகும்.


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
(1012)
விளக்கம்:

ஊணும் உடையும் அவையொழிந்த பிறவும் உலகத்து மக்கள் உயிர்க்கு எல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பாக அமைவது "நாணம்" ஆகும்.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.
(1013)
விளக்கம்:

உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒருபோதும் விடமாட்டா. அவ்வாறே "நாணம்" என்னும் குணத்தையும் "சால்பு" ஒருபோதும் விட்டுவிடாது.

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை.
(1014)
விளக்கம்:

நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும். அந்த நாணம் என்னும் ஆபரணம் இல்லையானால் அவரது பெருமித நடை கண்டவர்க்கு நோயாகி விடும்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி யென்னும் உலகு.
(1015)
விளக்கம்:

பிறரது பழியையும் தம்முடைய பழியையும் சமமாக மதித்து நாணுபவரை உலகத்தார் "நாணத்திற்கே உறைவிடம் இவர்தாம்" என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
(1016)
விளக்கம்:

உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்.

நாணால் உயிரைத் துறப்பவர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
(1017)
விளக்கம்:

நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாதபோது, சான்றோர்கள் உயிரை விட்டுவிடுவார்கள். உயிரைக் காப்பதற்கு நாணத்தை விடமாட்டார்கள்.

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
(1018)
விளக்கம்:

கேட்டவரும் கண்டவரும் நாணமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந் நாணானது அவனை விட்டு அறம் நீங்கி போகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கி விடும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
(1019)
விளக்கம்:

ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டு விடும். ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது அது அவன் நலத்தை எல்லாமே சுடும்.

நாணகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.
(1020)
விளக்கம்:

தம் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளதுபோல் மயக்குவது போன்றதாகும்.

No comments:

Post a Comment