Sunday, May 31, 2009

67. வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
(661)
விளக்கம்:

மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே. பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகாது.


ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
(662)
விளக்கம்:

ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும்.
(663)
விளக்கம்:

செயலில் ஆண்மையாவது, முடிந்த பின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம். இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
(664)
விளக்கம்:

இதனை இப்படி, அப்படி செய்வோம் என்று சொல்லுதல் எல்லோருக்கும் எளிதாகும். சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
(665)
விளக்கம்:

எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
(666)
விளக்கம்:

ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
(667)
விளக்கம்:

உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணி போல் நின்று காப்பவரையும் உலகம் உடையது. அதனால் ஒருவரது சிறிதான உருவத்தை பார்த்து இகழக் கூடாது.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
(668)
விளக்கம்:

மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வு இல்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகவே செய்ய வேண்டும்.

துன்பம் உறவரினுஞ் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
(669)
விளக்கம்:

முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முதலிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத் துணிவுடனே செய்து முடிக்க வேண்டும்.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
(670)
விளக்கம்:

எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது. சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது.

No comments:

Post a Comment