Sunday, May 31, 2009

130. நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக்கு ஆகா தது.
(1291)
விளக்கம்:

நெஞ்சமே, அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்டபின்னரும், நீதான் எமக்குத்துணையாகததுதான் எதனாலோ?


உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைக்
செறாஅர்செனச் சேறிஎன் நெஞ்சு.
(1292)
விளக்கம்:

என் நெஞ்சமே, நம்மேல் அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைந்து அவரிடமேசெல்கின்றாயே, அதுதான் எதனாலோ?

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சசேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
(1293)
விளக்கம்:

நெஞ்சமே, நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப்போனவருக்கு நண்பராக யாருமேஇல்லை என்பதனாலோ?

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
(1294)
விளக்கம்:

நெஞ்சமே, நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய். இனிமேல் அத்தகைய செய்திகளைப்பற்றி நின்னோடுஆராய்பவர்தாம் எவரோ?

பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
(1295)
விளக்கம்:

அவரைப் பெறாத போதும் அஞ்சும். பெற்றபோதும் பிரிவாரோ என்று அஞ்சும். இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையேஉடையதாகின்றது.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினியே இருந்ததென் நெஞ்சு.
(1296)
விளக்கம்:

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்தபோது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகமால், என்னைத் தின்பதுபோலத்துன்பம் தருவதாக இருந்தது.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
(1297)
விளக்கம்:

காதலரை மறக்கவியலாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்தோடு சேர்ந்து மறக்கக்கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேன்.

எள்ளின் இளிவாம் என்றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
(1298)
விளக்கம்:

பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும் என்று நினைத்து, அவர்மேல் உயிர்போலக் காதல்கொண்ட என் நெஞ்சம்அவரது உயர்பண்புகளையே நினைக்கிறதே.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி.
(1299)
விளக்கம்:

தாம் உரியதாக அடைந்திருக்கும் தம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில் வேறுஎவர்தாம் துணையாவார்கள்.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
(1300)
விளக்கம்:

தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாதபோது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும்இயல்பானதே ஆகும்.

No comments:

Post a Comment