Sunday, May 31, 2009

103. குடிசெயல் வகை

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
வெருமையிற் வீடுடைய தில்.
(1021)
விளக்கம்:

"என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓய மாட்டேன்" என்னும் பெருமையைப் போல், ஒருவனுக்குச் சிறந்த பெருமை தருவது வேறில்லை.


ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
(1022)
விளக்கம்:

"முயற்சியும், நிறைந்த அறிவும்" என்று சொல்லப்பட்ட இரண்டனையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால் ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்..
(1023)
விளக்கம்:

"என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்" என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன்வந்து உதவி நிற்கும்.

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
(1024)
விளக்கம்:

தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு அதன் வழி பற்றி அவர் ஆராயும் முன்பே தெய்வ உதவியால் அது தானாகவே முடிந்து விடும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
(1025)
விளக்கம்:

குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
(1026)
விளக்கம்:

"ஒருவனுடைய நல்லாண்மை" என்பது தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை அவன் தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
(1027)
விளக்கம்:

அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார். அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர்.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.
(1028)
விளக்கம்:

தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருத வேண்டும். மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும். ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
(1029)
விளக்கம்:

தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே ஓர் கொள்கலமோ? அது ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ?

இடுக்கன்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இல்லாத குடி.
(1030)
விளக்கம்:

துன்பம் வரும்போது அதைத் தாங்கி காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம் புகுந்ததால் வீழ்கின்ற மரம் போல வீழும்.

No comments:

Post a Comment