Sunday, May 31, 2009

91. பெண்வழிச் சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
(901)
விளக்கம்:

தம் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார். பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுக்கும் பொருளும் அதுவே.



பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுந் தரும்.
(902)
விளக்கம்:

தன் ஆண்மையைப் பாணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
(903)
விளக்கம்:

தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அது இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில் எப்போதும் நாணத்தையே தரும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.
(904)
விளக்கம்:

தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப் பயனை இல்லாத ஒருவனுக்கு செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும் அது நல்லோரால் மதிக்கப்படாது.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
(905)
விளக்கம்:

தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
(906)
விளக்கம்:

தம் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகின்றவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும் ஆண்மையற்றவரே.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
(907)
விளக்கம்:

தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும்.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
(908)
விளக்கம்:

தம் மனையாள் விரும்பியபடியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்க மாட்டார்கள். மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.
(909)
விளக்கம்:

அறச் செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
(910)
விளக்கம்:

கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.

No comments:

Post a Comment