Sunday, May 31, 2009

76. பொருள் செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
(751)
விளக்கம்:

ஒரு பொருளாக மதிப்பதற்கு தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும் படியாகச் செய்யக்கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை.


இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
(752)
விளக்கம்:

பொருள் இல்லாத வறியவரை எல்லாரும் இகழ்ச்சியாகவே பேசுவர்; செல்வம் உடையவர்களையோ எல்லாரும் சிறப்பு செய்து போற்றுவார்கள்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
(753)
விளக்கம்:

பொருள் என்னும் நந்தாவிளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும்.

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
(754)
விளக்கம்:

தீய வழிகளில் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்த செல்வமானது, அறவாழ்க்கையையும் இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பதாகும்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொகுளாக்கம்
புல்லார் புரள விடல்.
(755)
விளக்கம்:

அருள் என்னும் இயல்போடும் மக்களின் அன்போடும் பொருந்தி வாராத பொருட் பெருக்கத்தை, தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டு விட வேண்டும்.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
(756)
விளக்கம்:

உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும் வேந்தன் பொருளாகும்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
(757)
விளக்கம்:

அன்பு என்னும் தாய் பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தையானது, பொருள் என்கின்ற செல்வம் படைத்த செவிலித்தாயால் வளர்க்கப்பட வேண்டும்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
(758)
விளக்கம்:

தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டாற் போல, துன்பமின்றி இன்பம் தருவதாகும்.

செய்க பொருளை செறுநர் செறுக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்.
(759)
விளக்கம்:

பகைவரின் மனச்செறுக்கை அழித்து வெற்றி பெரும் ஆயுதம் பொருளைக் காட்டிலும் கூர்ாமயானது வேறில்லை; ஆதலால் பொருளை எப்போதும் தேடிக் கொள்ள வேண்டும்.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றயார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
(760)
விளக்கம்:

சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும்.

No comments:

Post a Comment