Sunday, May 31, 2009

95. மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
(941)
விளக்கம்:

ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
(942)
விளக்கம்:

முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு "மருந்து" என்னும் எதுவுமே வேண்டாம்.

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
(943)
விளக்கம்:

முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும். அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
(944)
விளக்கம்:

முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச் செய்யாத உணவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
(945)
விளக்கம்:

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
(946)
விளக்கம்:

அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
(947)
விளக்கம்:

பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
(948)
விளக்கம்:

குணங்குன்றிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
(949)
விளக்கம்:

மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
(950)
விளக்கம்:

பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்.

No comments:

Post a Comment