Sunday, May 31, 2009

83. கூடா நட்பு

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
(821)
விளக்கம்:

உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரின் நட்பானது நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.


இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
(822)
விளக்கம்:

நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலை மகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
(823)
விளக்கம்:

பலவான நல்ல அற நூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
(824)
விளக்கம்:

முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டுவிட வேண்டும்.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று.
(825)
விளக்கம்:

மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை எந்த ஒரு வகையாலும் அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
(826)
விளக்கம்:

நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுக்களைச் சொன்னாலும் நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்து விடலாம்.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
(827)
விளக்கம்:

நம்மிடம் பேசும் பேவில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே. இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமை தரும் என்று தள்ளிவிட வேண்டும்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
(828)
விளக்கம்:

நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும். பகைவர் அழுது வடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
(829)
விளக்கம்:

வெளிப்பட மிகுதியாக நட்புச் செய்து உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்து விடல் வேண்டும்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
(830)
விளக்கம்:

பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து உள்ளத்திலே போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.

No comments:

Post a Comment