Sunday, May 31, 2009

49. காலமறிதல்

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
(481)
விளக்கம்:

தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை யாக்கும் கயிறு.
(482)
விளக்கம்:

காலத்தோடு பொருத்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மைவிட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(483)
விளக்கம்:

ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
(484)
விளக்கம்:

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
(485)
விளக்கம்:

உலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
(486)
விளக்கம்:

ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர்மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக் கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
(487)
விளக்கம்:

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
(488)
விளக்கம்:

தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவு காலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
(489)
விளக்கம்:

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
(490)
விளக்கம்:

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து, காலம் வாய்த்த போதில், கொக்கு மீனைக் குத்தினாற்போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment