Sunday, May 31, 2009

71. குறிப்புறிதல்

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
(701)
விளக்கம்:

ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான்.


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
(702)
விளக்கம்:

கொஞ்சமும் ஐயப்படாத வகையிலே, பிறர் உள்ளத்திலுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனைத் தெய்வத்தோடு சமமாகக் கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
(703)
விளக்கம்:

ஒருவரது முகக் குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போர் அனையரால் வேறு.
(704)
விளக்கம்:

தாம் செய்வதற்குத் குறித்த ஒரு செயலைச் சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார்.

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
(705)
விளக்கம்:

ஒருவர் ஒரு கருத்தைக் குறிப்பால் காட்டியபோது, அதை உணராமலிருந்தால், உடலுறுப்புக்களுள் கண் என்பது என்ன பயனைச் செய்வதாகுமோ?

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
(706)
விளக்கம்:

தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப்போல், ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
(707)
விளக்கம்:

முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதனை வெளியே காட்டிவிடும்.

ணிகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.
(708)
விளக்கம்:

ணிகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்பவரைத் துணையாக அடைந்தால், அவர் எதிரே நின்றாலே போதும், எதுவும் சொல்ல வேண்டாம்.

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
(709)
விளக்கம்:

கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும் நட்பையும் அவரது கண்களே நமக்குச் சொல்லிவிடும்.

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
(710)
விளக்கம்:

நுண்ணறிவு உடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப்பிறரது கண் அல்லாமல் பிற உறுப்புக்கள் யாதும் இல்லை.

No comments:

Post a Comment