Sunday, May 31, 2009

133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு.
(1321)
விளக்கம்:

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்குவல்லது ஆகும்.


ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
(1322)
விளக்கம்:

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும்,பின்னர்ப் பெருமை பெறும்.

புலத்தலின் புத்தேணாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
(1323)
விளக்கம்:

நிலத்தோடு நீர் பொருந்தினாற்போல நம்மொடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும் தேவருலகத்துஇன்பமும் சிறந்ததாகுமோ?

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
(1324)
விளக்கம்:

காதலரைத் தழுவி விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும்தோன்றுகின்றது.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறிலின் ஆங்கொன்று உடைத்து.
(1325)
விளக்கம்:

தவறு இல்லாதவரானபோதும், நம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை ஊடலால் நீங்கியிருக்கும்போது ஊடலிலும் ஓர் இன்பம் உள்ளது.

உணலினும் உண்டது அறலினது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
(1326)
விளக்கம்:

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும். அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தைவிடஊடிப்பெறும் இன்பமே சிறந்தது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
(1327)
விளக்கம்:

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர். அந்த உண்மையானது ஊடல் தெளிந்தபின் அவர் கூடிமகிழும்போதுதெளிவாகக் காணப்படும்.

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
(1328)
விளக்கம்:

நெற்றி வியர்வை அரும்பும்படி காதலனுடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து அவர் உணர்த்த மீளவும் சேர்ந்துஇன்புறும்போது பெறுவோமோ?

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னா இரா.
(1329)
விளக்கம்:

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே யாம் அவளை இரந்து நிற்கும்படியாகஇராக்காலமும் இன்னும் நீள்வதாக.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(1330)
விளக்கம்:

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும். காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவதலையும் பெற்றால், அஃது அதனினும்மிகுந்த இன்பமாகும்.

No comments:

Post a Comment