Sunday, May 31, 2009

133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு.
(1321)
விளக்கம்:

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்குவல்லது ஆகும்.


ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
(1322)
விளக்கம்:

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும்,பின்னர்ப் பெருமை பெறும்.

புலத்தலின் புத்தேணாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
(1323)
விளக்கம்:

நிலத்தோடு நீர் பொருந்தினாற்போல நம்மொடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும் தேவருலகத்துஇன்பமும் சிறந்ததாகுமோ?

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
(1324)
விளக்கம்:

காதலரைத் தழுவி விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும்தோன்றுகின்றது.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறிலின் ஆங்கொன்று உடைத்து.
(1325)
விளக்கம்:

தவறு இல்லாதவரானபோதும், நம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை ஊடலால் நீங்கியிருக்கும்போது ஊடலிலும் ஓர் இன்பம் உள்ளது.

உணலினும் உண்டது அறலினது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
(1326)
விளக்கம்:

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும். அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தைவிடஊடிப்பெறும் இன்பமே சிறந்தது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
(1327)
விளக்கம்:

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர். அந்த உண்மையானது ஊடல் தெளிந்தபின் அவர் கூடிமகிழும்போதுதெளிவாகக் காணப்படும்.

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
(1328)
விளக்கம்:

நெற்றி வியர்வை அரும்பும்படி காதலனுடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து அவர் உணர்த்த மீளவும் சேர்ந்துஇன்புறும்போது பெறுவோமோ?

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னா இரா.
(1329)
விளக்கம்:

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே யாம் அவளை இரந்து நிற்கும்படியாகஇராக்காலமும் இன்னும் நீள்வதாக.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(1330)
விளக்கம்:

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும். காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவதலையும் பெற்றால், அஃது அதனினும்மிகுந்த இன்பமாகும்.

132. புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
(1311)
விளக்கம்:

பரத்தனே! பெண்தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால்நின் மார்பை நான் தழுவமாட்டேன்.


ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.
(1312)
விளக்கம்:

காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக. அவரும் அவ்வேளையில் யாம் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்றுநினைத்து தும்மினார்.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
(1313)
விளக்கம்:

மரக்கிளையிளிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கேஎனக்குச் சூட்டினீர் என்று காய்வாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
(1314)
விளக்கம்:

யாரினும் நின்னையே விரும்புகின்றோம் என்று சொன்னேன். அவள், யாரினும்? யாரினும்? என்று கேட்டவளாக என்னோடும்ஊடிப் பிணங்கினாள்.

இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
(1315)
விளக்கம்:

இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம் என்று சொன்னேன். இனி வரும் பிறப்பில் பிரிவோம் என்று நான் கூறியதாகக் கருதிக்கண்களில் நீரைக் கொண்டனள்.

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
(1316)
விளக்கம்:

நின்னை நினைத்தேன் என்றேன். நினைத்தது உண்டாயின் மறந்திருந்ததும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்? என்று சொல்லி,அவள் தழுவாமல் பிணங்கினாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழுத்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
(1317)
விளக்கம்:

யான் தும்மினேன். நூறாண்டு என்று கூறி வாழ்த்தினாள். அடுத்து அதைவிட்டு, எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர் என்றுகேட்டுக் கேட்டு அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
(1318)
விளக்கம்:

அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும் அடக்கினேன். உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடிமறைத்தீரோ என்று அவள் அழுதாள்.

தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதீர் என்று.
(1319)
விளக்கம்:

அவள் ஊடிப் பிணங்கியபோது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், நீர் பிறமகளிர்க்கும் இத் தன்மையரே ஆவீர் என்றுஎன்மேற் சினம் கொள்வாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
(1320)
விளக்கம்:

அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், நீர் எவரையோ மனத்திற்கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ என்றுகேட்டுச் சினம் கொள்வாள்.

131. புலவி

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கஞ் சிறிது.
(1301)
விளக்கம்:

நாம் ஊடுரும்போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம். அதற்காக அவர் வந்ததும் அவர்பாற்சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
(1302)
விளக்கம்:

உணவுப் பண்டங்களில் அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல். அதை அளவுகடந்து சிறிது நீளவிட்டாலும் உப்பின்மிகுதிபோல அது கெட்டுவிடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
(1303)
விளக்கம்:

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்து தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவோரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச்செய்வதுபோன்ற கொடுமையாகும்.

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
(1304)
விளக்கம்:

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப்போன வள்ளிக்கொடியின் வேரைஅறுப்பதுபோன்றது ஆகும்.

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.
(1305)
விளக்கம்:

நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தேஉண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
(1306)
விளக்கம்:

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது மிகக் கனிந்த கனியும் பழுக்காத கருக்காயும் போலபயனற்றதாகும்.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
(1307)
விளக்கம்:

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது. அது கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ என்று நினைத்துவருந்தும் அச்சமாகும்.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
(1308)
விளக்கம்:

நம்மாலே இவரும் நோயுற்றார் என்று உணர்ந்து அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாதபோது வீணாக வருத்தம் அடைவதனால்என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
(1309)
விளக்கம்:

நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும். அதுபோன்றதே ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால்இனிமையைத் தருவதாகும்.

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
(1310)
விளக்கம்:

ஊடல் கொண்டபோது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றரோடு, எம் நெஞ்சம் கூடுவோம் என்று நினைப்பது அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.

130. நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக்கு ஆகா தது.
(1291)
விளக்கம்:

நெஞ்சமே, அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்டபின்னரும், நீதான் எமக்குத்துணையாகததுதான் எதனாலோ?


உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைக்
செறாஅர்செனச் சேறிஎன் நெஞ்சு.
(1292)
விளக்கம்:

என் நெஞ்சமே, நம்மேல் அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைந்து அவரிடமேசெல்கின்றாயே, அதுதான் எதனாலோ?

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சசேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
(1293)
விளக்கம்:

நெஞ்சமே, நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப்போனவருக்கு நண்பராக யாருமேஇல்லை என்பதனாலோ?

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
(1294)
விளக்கம்:

நெஞ்சமே, நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய். இனிமேல் அத்தகைய செய்திகளைப்பற்றி நின்னோடுஆராய்பவர்தாம் எவரோ?

பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
(1295)
விளக்கம்:

அவரைப் பெறாத போதும் அஞ்சும். பெற்றபோதும் பிரிவாரோ என்று அஞ்சும். இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையேஉடையதாகின்றது.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினியே இருந்ததென் நெஞ்சு.
(1296)
விளக்கம்:

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்தபோது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகமால், என்னைத் தின்பதுபோலத்துன்பம் தருவதாக இருந்தது.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
(1297)
விளக்கம்:

காதலரை மறக்கவியலாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்தோடு சேர்ந்து மறக்கக்கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேன்.

எள்ளின் இளிவாம் என்றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
(1298)
விளக்கம்:

பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும் என்று நினைத்து, அவர்மேல் உயிர்போலக் காதல்கொண்ட என் நெஞ்சம்அவரது உயர்பண்புகளையே நினைக்கிறதே.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி.
(1299)
விளக்கம்:

தாம் உரியதாக அடைந்திருக்கும் தம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில் வேறுஎவர்தாம் துணையாவார்கள்.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
(1300)
விளக்கம்:

தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாதபோது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும்இயல்பானதே ஆகும்.

129. புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.
(1281)
விளக்கம்:

நினைத்தபொழுதில் களிப்படைவதும், கண்ட பொழுதிலேமகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளக்குக் கிடையாது, காமத்திற்கு உண்டு.


தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
(1282)
விளக்கம்:

பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதளவேனும் ஊடிப் பிணங்காமல்இருத்தல் வேண்டும்.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்.
(1283)
விளக்கம்:

என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என்கண்கள் அமைதி அடையவில்லையே.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு.
(1284)
விளக்கம்:

தோழி, நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன். ஆனால், என் நெஞ்சமோ அதை மறந்துவிட்டு, அவரோடுஇணைந்து கூடுவதிலேயே சென்றதே.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.
(1285)
விளக்கம்:

மை எழுதும்போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப்போல், என் காதலனைக் கண்டபோது, அவள்குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே.

காணுங்கால் காணேன் தவறாய காணக்கால்
காணேன் தவறல் லவை.
(1286)
விளக்கம்:

என் காதலனைக் காணும்போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன். அவரைக் காணாதபோதோ, தவறல்லாதநல்ல செயல்களையே யான் காணேன்.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலர்ந்து.
(1287)
விளக்கம்:

ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப்போல, ஊடுதல் பயனில்லை என்பதைஅறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
(1288)
விளக்கம்:

கள்வனே, இழிவு வரத் தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவர்க்கு மென்மேலும் ஆசையூட்டும்கள்ளைப்போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
(1289)
விளக்கம்:

அனிச்ச மலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது. அதன் தன்மை அறிந்து அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள்உலகத்தில் சிலரே யாவர்.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
(1290)
விளக்கம்:

கண் நோக்கத தளவிலே பிணங்கினாள். பின், என்னைக் காட்டிலும்தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன்பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.

128. குறிப்பறிவுறுத்தல்

சுரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு.
(1271)
விளக்கம்:

நீதான் மறைத்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில்உள்ளதாகும்.


கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.
(1272)
விளக்கம்:

கண் நிறைந்த பேரழகும், மூங்கில்போல் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாகஉள்ளது.

மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.
(1273)
விளக்கம்:

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்றகுறிப்பும் ஒன்று இருக்கின்றது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்கும் உள்ளதொன்று உண்டு.
(1274)
விளக்கம்:

அரும்பினுள்ளே அடங்கியிருக்ணுன்ற மணத்தைப்போல என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின்குறிப்பும் ஒன்று உள்ளது.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
(1275)
விளக்கம்:

செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒருமருந்தையும் உடையதாய் இருந்தது.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து.
(1276)
விளக்கம்:

பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும்உட்கருத்தையும் உடையதாகும்.

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
(1277)
விளக்கம்:

குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவனான நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும் நம் கைவளையல்கள்முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
(1278)
விளக்கம்:

நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர். யாமும், அவரைப் பிரிந்து ஏழு நாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலைபடர்ந்தவராய் இருக்கின்றோமே.

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.
(1279)
விளக்கம்:

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்புஉடன்போக்கு என்பதே ஆகும்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
(1280)
விளக்கம்:

கண்ணினால் காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண்தன்மைக்கு, மேலும் சிறந்த பெண்தன்மைஉடையது என்று சொல்லுவர்.

127. அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(1261)
விளக்கம்:

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன. அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுவிரல்களும் தேய்ந்து போயின.


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
(1262)
விளக்கம்:

தோழி, அவரைப் பிரிந்து வருந்தியிருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகு கெட்டு மெலியும். என் தோள்அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(1263)
விளக்கம்:

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியேஇன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறும்என் நெஞ்சு.
(1264)
விளக்கம்:

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறிஏறிப் பார்க்கின்றதே.

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோள் பசப்பு.
(1265)
விளக்கம்:

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக. அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலை நோயும்தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
(1266)
விளக்கம்:

என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தைநானும் பருகுவேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1267)
விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில்அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1268)
விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில்அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
ருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
(1269)
விளக்கம்:

தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் தானும் ஏழுநாள் போல்நெடியதாகக் கழியும்.

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
(1270)
விளக்கம்:

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்த போய்விட்டால் அவரைப் பெறுவதானால் என்ன? பெற்றால்தான் என்ன?அவரோடு பொருந்தினால்தான் என்ன?

126. நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
(1251)
விளக்கம்:

நாணம் என்னும் தாழ் பொருந்திய நிறை என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.


காமம் எனஒன்றே கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
(1252)
விளக்கம்:

காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது. அது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்துஆள்கின்றது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
(1253)
விளக்கம்:

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன். ஆனால் அதுவோ என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத்தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

நிறையுடையேன் என்பேன்மன் யானோ என்காமம்
மறையிறந்து மன்று படும்.
(1254)
விளக்கம்:

இதுவரை நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்துமன்றத்தில் வெளிப்படுகின்றதே.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
(1255)
விளக்கம்:

தம்மை வெறுப்பவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையேஅன்று.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர்.
(1256)
விளக்கம்:

வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக்காமநோயானது எத்தன்மை உடையதோ.

நாணென ஒன்றோ அறியலம் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.
(1257)
விளக்கம்:

நாம் விரும்பிய காதலரும் காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் நாணம் என்று குறிக்கப்படும் ஒன்றையும்அறியாதேயே இருப்போம்.

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.
(1258)
விளக்கம்:

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று நம் பெண்மை என்னும் அரணைஉடைக்கும் படையாய் இருந்தன.

புலம்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
(1259)
விளக்கம்:

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு,அவரைத் தழுவினேன்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல்.
(1260)
விளக்கம்:

தீயிலே கொழுப்பை இட்டாற்போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும்தன்மைதான் உண்டாகுமோ.

125. நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
(1241)
விளக்கம்:

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயானும்சொல்ல மாட்டாயோ?


காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.
(1242)
விளக்கம்:

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதாவராக இருக்க, நீ மட்டுமே அவரை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவதுபேதைமை ஆகும்.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
(1243)
விளக்கம்:

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்றுநினைக்கும் தன்மை இல்லையே.

கண்ணும் கொளச்சேரி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.
(1244)
விளக்கம்:

நெஞ்சமே, நீ அவரிடம் போகும்போது இக் கண்களையும் அழைத்துப் போவாயாக. அவரைக் காணவேண்டும் என்று இவைஎன்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
(1245)
விளக்கம்:

நெஞ்சமே, நாம் விரும்பி நாடினாலும் நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து அவரைக் கைவிடநம்மால் முடியுமோ?

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.
(1246)
விளக்கம்:

என் நெஞ்சமே, ஊடியபோது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய். பொய்யானசினம் கொண்டுதான் காய்கின்றாய்.

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.
(1247)
விளக்கம்:

நல்ல நெஞ்சமே, ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க என்னால் முடியாது.

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
(1248)
விளக்கம்:

என் நெஞ்சமே, நம் துன்பத்தை நினைந்து இரங்கிவந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கி, பிரிந்த காதலரின் பின்னாகச்செல்கின்றாயே, நீ பேதைமை உடையை.

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
(1249)
விளக்கம்:

என் நெஞ்சமே, காதலர் நம் உள்ளத்துள்ளேயே இருக்கும்போது, நீ அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச்செல்கின்றாயோ?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
(1250)
விளக்கம்:

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சத்திலேயே உடையவராய் நாம் இருக்கும்போதும், இன்னும் நாம் அழகிழந்து வருகின்றோமே.

124. உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின காண்.
(1231)
விளக்கம்:

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்று விட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம்அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
(1232)
விளக்கம்:

பசலை நிறத்தைப்பெற்று நீரைச் சொரியும் கண்கள், தம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப்பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
(1233)
விளக்கம்:

காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத்தெரிவிப்பவை போல் உள்ளனவே.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
(1234)
விளக்கம்:

தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச்செயகின்றனவே.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
(1235)
விளக்கம்:

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையைஊரறிய சொல்கின்றனவே.

தொடியோடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
(1236)
விளக்கம்:

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியவர் என்றுகூறக்கேட்டு, யானும் வருந்துவேனே.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து.
(1237)
விளக்கம்:

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச்செய்ததனனால் நீயும் பெருமை அடையாயோ.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
(1238)
விளக்கம்:

தழுவிய கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலைநிறத்தை அடைந்து விட்டதே.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
(1239)
விளக்கம்:

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து பசலை நிறம்அடைந்து விட்டனவே.

கண்ணின் பசப்போ பருவால் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
(1240)
விளக்கம்:

காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருதுன்பம்அடைந்துவிட்டது.