Sunday, May 31, 2009

75. அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
(741)
விளக்கம்:

பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கு அரண் செல்வம்; அஞ்சி உள்ளே இருந்து தம்மை காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம்.


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
(742)
விளக்கம்:

நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மர நிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்.

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
(743)
விளக்கம்:

'உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் ' என்னும் இந்நான்கும் சிறப்பாக அமைந்ததே அரண் என்று போரியல் நூல்கள் கூறும்.

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.
(744)
விளக்கம்:

காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிய பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றிலும் அழிக்கவல்லதே நல்ல அரண் ஆகும்.

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெள்தாம் நீரது அரண்.
(745)
விளக்கம்:

பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருட்களை உடையதாயும், அகத்தாரது போர் நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண்.

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
(746)
விளக்கம்:

அகத்தாருக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய் விளங்குவதே அரண்.

ணிற்றியும் ணிற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
(747)
விளக்கம்:

சூழ்ந்து ணிற்றியும், திடீரெனத் தாக்கியும் வஞ்சனைகளாலே உள்ளிருப்பபோரை வசப்படுத்தியும் பகைவரால் கைப்பற்ற இயலாத அருமையுடையதே அரண்.

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
(748)
விளக்கம்:

வந்து சூழந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம் விட்டு பெயராமல் நிலைத்து நின்று வெல்லும் அமைப்பை உடையதே அரண்.

முனைமுகத்து மாற்றவர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.
(749)
விளக்கம்:

முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்துபோகுமாறு, போர்த் தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொணடதே அரண்.

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
(750)
விளக்கம்:

எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண் காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும்.

No comments:

Post a Comment