Sunday, May 31, 2009

64. அமைச்சு

கருவியும் காலணிம் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
(631)
விளக்கம்:

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் செயலின் அருமையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன்.


வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
(632)
விளக்கம்:

மன வலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலங்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே அமைச்சன்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
(633)
விளக்கம்:

பகைவரோடு சேர்நதுள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன்.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒரு தலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
(634)
விளக்கம்:

எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லன்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
(635)
விளக்கம்:

நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய் இருப்பவனே, நல்ல அமைச்சன்.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
(636)
விளக்கம்:

இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்க முடியாமல் போய்விடும்.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
(637)
விளக்கம்:

செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும்.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
(638)
விளக்கம்:

அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும்.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
(639)
விளக்கம்:

அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
(640)
விளக்கம்:

முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.

No comments:

Post a Comment