Sunday, May 31, 2009

120. தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
(1191)
விளக்கம்:

தாம் விரும்பும் காதலர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்லின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப்பெற்றவர்கள் ஆவார்.


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
(1192)
விளக்கம்:

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர் வாழ்பவர்க்கு, வானம் மழை பெய்துஉதவினாற் போன்றதாகும்.

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு.
(1193)
விளக்கம்:

காதலரால் விரும்பப் படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், 'மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்' என்னும்செருக்குப் பொருந்துவது ஆகும்.

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வீர்
வீழப் படாஅர் எனின்.
(1194)
விளக்கம்:

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப் படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம்மகளிர், முன் செய்த நல் வினைப்பயனை உடையவரே அல்லர்.

நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.
(1195)
விளக்கம்:

நாம் காதல் கொண்டவர், நம்மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத்தான் செய்யப் போகின்றார்.

ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது.
(1196)
விளக்கம்:

காதல் ஒருதலையானது என்றால் மிகவும் துன்பமானது; காவடித்தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடிஇருந்ததானால் , அதுவே மிக இனிமையானது.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான்.
(1197)
விளக்கம்:

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டுமே காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன்காண மாட்டானோ?

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணா இல்.
(1198)
விளக்கம்:

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மைஉடையவர்கள் யாரும் இல்லை.

நசை இயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
(1199)
விளக்கம்:

யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும்,காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
(1200)
விளக்கம்:

நெஞ்சமே ! நின்னிடம் அன்பற்றவர்க்கு நின் நோயைச் சென்று செல்லுகிறாயே; அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும்முயல்வாயாக.

No comments:

Post a Comment