Sunday, May 31, 2009

96. குடிமை

இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
(951)
விளக்கம்:

செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.


ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
(952)
விளக்கம்:

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒருபோதுமே தவறமாட்டார்கள்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
(953)
விளக்கம்:

எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
(954)
விளக்கம்:

பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
(955)
விளக்கம்:

தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கியபோதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்.

சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.
(956)
விளக்கம்:

"வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம்" என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்ய மாட்டார்கள்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
(957)
விளக்கம்:

உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
(958)
விளக்கம்:

குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக்குடிப்பிறப்பு உடையவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
(959)
விளக்கம்:

நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும். அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச் சொற்கள் எடுத்துக் காட்டும்.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
(960)
விளக்கம்:

ஒருவன் தனக்கு நன்மைகளை விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும். குலனுடைமையை விரும்பினால் பணிவோடு நடத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment