Sunday, May 31, 2009

63. இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.
(621)
விளக்கம்:

துன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
(622)
விளக்கம்:

வெள்ளமாகப் பெருகி வருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்தபோது, அவனைவிட்டு மறைந்து போய்விடும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
(623)
விளக்கம்:

இடையூறுகள் வந்தபோது அதற்காக வருந்தாத மனத் தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவர்.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து.
(624)
விளக்கம்:

தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
(625)
விளக்கம்:

மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு, நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும்.

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
(626)
விளக்கம்:

பொருள் அடைந்தோம் என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் பொருளை இழந்தோம் என்று துன்பம் அடைவாரோ?

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
(627)
விளக்கம்:

இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து, அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
(628)
விளக்கம்:

இன்பம் உண்டாகியபோது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருவதும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
(629)
விளக்கம்:

இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன் துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான்.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
(630)
விளக்கம்:

துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான்.

No comments:

Post a Comment