Sunday, May 31, 2009

52. தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆள ப் படும்.
(511)
விளக்கம்:

ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.


வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
(512)
விளக்கம்:

செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப் படுத்திக்கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நேன்குடையான் கட்டே தெளிவு.
(513)
விளக்கம்:

அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந் நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
(514)
விளக்கம்:

எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்தபோதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
(515)
விளக்கம்:

செய்யும் செயலைப்பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
(516)
விளக்கம்:

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
(517)
விளக்கம்:

இந்தச் செயலை இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச்செயலை அவனிடமே செய்யுமாறு விட்டுவிடுதல் வேண்டும்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
(518)
விளக்கம்:

இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.

வினைக்கண் வினையுடையான் கேன்மை வேறாக
நினைப்பான் நீங்கும் திரு.
(519)
விளக்கம்:

எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனைவிட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
(520)
விளக்கம்:

தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கேணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக.

No comments:

Post a Comment