Sunday, May 31, 2009

79. நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
(781)
விளக்கம்:

நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை. நட்பைப் போல் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை.


நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
(782)
விளக்கம்:

நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளரும். பேதைகளின் நட்பு, தேய்பிறை போல் நாளுக்கு நாள் தேய்ந்து போகும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
(783)
விளக்கம்:

நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப்பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் .

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
(784)
விளக்கம்:

நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று. அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
(785)
விளக்கம்:

நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
(786)
விளக்கம்:

உள்ளம் கலக்காமல் முகத் தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது. நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்புச் செய்வது தான் நல்ல நட்பு.

அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
(787)
விளக்கம்:

நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின்போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
(788)
விளக்கம்:

ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவது தான் நல்ல நட்பு.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
(789)
விளக்கம்:

நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது என்றால், மனமாறுபாடு இல்லாமல் முடிந்த இடமெல்லாம் இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும்.

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
(790)
விளக்கம்:

இவர் எமக்கு இப்படிப்பட்டவர், யாம் இவருக்கு இத்தன்மையவர் என்று நட்பின் அளவைச் சொன்னாலும் அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும்.

No comments:

Post a Comment