Sunday, May 31, 2009

86. இகல்

இகலென்ப எல்லா உயர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்.
(851)
விளக்கம்:

எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், இகல் என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.


பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
(852)
விளக்கம்:

தம்முடன் கூடாமையை நினைத்து ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது.

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
(853)
விளக்கம்:

"மாறுபாடு" என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கிவிட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை அதுவே தரும்.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
(854)
விளக்கம்:

"மாறுபாடு" என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.
(855)
விளக்கம்:

தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர் எவருமே இலர்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணிந்து.
(856)
விளக்கம்:

"பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது" என்று அதனைச் செய்பவனது உயிர் வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்.

மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகன்மேவல்
இன்னா அறிவி னவர்.
(857)
விளக்கம்:

இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூல்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.
(858)
விளக்கம்:

தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும். அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும்.

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
(859)
விளக்கம்:

தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான். தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
(860)
விளக்கம்:

"மாறுபாடு" என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும். நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும்.

No comments:

Post a Comment