Sunday, May 31, 2009

35. துறவு

யாதனின் யாதனின் நீங்கயான் நோதல்
அதனின் அதனின் இலன்.
(341)
விளக்கம்:

எந்த எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.


வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
(342)
விளக்கம்:

துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்: அப்படி விட்டுவிட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
(343)
விளக்கம்:

ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்: அதற்கு வேண்டிய பொருள்களை ஒருசேர விட்டுவிட வேண்டும்.

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
(344)
விளக்கம்:

ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும். ஆசை இரூந்தால் அது மீண்டும் உலகபோகத்தில் மயங்கியதே ஆகும்.

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கும் உடம்பும் மிகை.
(345)
விளக்கம்:

பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்: ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எதற்காகவோ?

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
(346)
விளக்கம்:

உடலை யான் எனவும், பொருள்களை எனது எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
(347)
விளக்கம்:

பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக்கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
(348)
விளக்கம்:

அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்: மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
(349)
விளக்கம்:

பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்துபோகும்: மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(350)
விளக்கம்:

பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமேபற்றுக: உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.

No comments:

Post a Comment