Sunday, May 31, 2009

70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
(691)
விளக்கம்:

மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகி வர வேண்டும்.


மன்னர் விழைய விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்.
(692)
விளக்கம்:

மன்னர் விரும்புகிற பொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும்.

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
(693)
விளக்கம்:

அரசன் சினங்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
(694)
விளக்கம்:

அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும்போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும்.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
(695)
விளக்கம்:

அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அதன் தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்டல் வேண்டும்.

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
(696)
விளக்கம்:

அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும்.

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
(697)
விளக்கம்:

அரசன் விரும்புகிற செய்திகளை மட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதனபற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும்.

இனையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்.
(698)
விளக்கம்:

"இளையவர்" என்று கருதியோ, "இனமுறை" என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

கொளப்பட்டோம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
(699)
விளக்கம்:

தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம் என்று, அவர் ஏற்றுக்கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
(700)
விளக்கம்:

மிகப் பழையகாலத் தொடர்புடையோர் என்று நினைத்தும் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும்.

No comments:

Post a Comment