Tuesday, May 26, 2009

5. இல் வாழ்க்கை

5. இல் வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

(41)
விளக்கம்:

இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.



துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

(42)
விளக்கம்:

துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

(43)
விளக்கம்:

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

(44)
விளக்கம்:

பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்து கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதனால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

(45)
விளக்கம்:

கணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப் படி நிகழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.

(46)
விளக்கம்:

அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்திவருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

(47)
விளக்கம்:

அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே, வாழ்வு முயற்சியில் ஈடுபடுபவர்களுள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

(48)
விளக்கம்:

பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவம் செய்பவர்களின் நோன்பைவிட வலிமையானது ஆகும்.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

(49)
விளக்கம்:

இல்லற வாழ்க்கையே சிறந்த அறம் என்று சான்றோர் கூறுகின்றனர். அதிலும் பிறரைப் பழித்துப் பேசாமல் இருப்பது இன்னும் சிறப்பாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

(50)
விளக்கம்:

உலக நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்.

No comments:

Post a Comment