2. வான் சிறப்பு |
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
(11)
விளக்கம்:மழை பெய்வதனாலேயே உலக உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
(12)
விளக்கம்:உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
(13)
விளக்கம்:மழை காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற இப் பரந்த உலகில் பசி நிலைத்து நின்று உயிர்களை வாட்டும்.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
(14)
விளக்கம்:மழை என்னும் வருவாயின் வளம் குறைந்தால், பயிர் செய்யும் உழவரும் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
(15)
விளக்கம்:காலத்தில் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை. அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது.
(16)
விளக்கம்:வானிலிருந்து மழைத்துளி வீழ்வது நின்றுவிட்டால், உலகில் பசும்புல்லின் தலையைக் காண்பதுகூட அரிதாகிவிடும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
(17)
விளக்கம்:மேகமானது கடல்நீரை முகந்து சென்று மீண்டும் மழையாகப் பெய்யவிட்டால், அப்பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
(18)
விளக்கம்:மழை முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்தில் வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
(19)
விளக்கம்:மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்தில் பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டும் நிலையாமற் போய்விடும்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்நின்று அமையாது ஒழுக்கு.
(20)
விளக்கம்:நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.
No comments:
Post a Comment