Tuesday, May 26, 2009

1. கடவுள் வாழ்த்து

1. கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

(01)
விளக்கம்:

அகர (அ) ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதல்; அதுபோல, ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கிறான்.



கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

(02)
விளக்கம்:

தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றனால் உண்டான பயன் யாதுமில்லை.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

(03)
விளக்கம்:

அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

(04)
விளக்கம்:

விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

(05)
விளக்கம்:

இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இரு வகை வினைகளும் வந்து சேரா.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

(06)
விளக்கம்:

ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

(07)
விளக்கம்:

தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

(08)
விளக்கம்:

அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

(09)
விளக்கம்:

எண்வகைக் குணங்களின் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

(10)

விளக்கம்:

இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.

No comments:

Post a Comment