Tuesday, May 26, 2009

8. அன்பு உடைமை

8. அன்பு உடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
(71)
விளக்கம்:

அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
(72)
விளக்கம்:

அன்பில்லாத நெஞ்சத்தை உடையவர், எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்.ஆனால் அன்பு உள்ளம் கொண்டவரோ, தம் எலும்பையும் கூடபிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
(73)
விளக்கம்:

அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது. அந்த பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
(74)
விளக்கம்:

அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கிற அளவற்ற மேன்மையைத் தரும்.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
(75)
விளக்கம்:

இவ்வுலகத்தில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
(76)
விளக்கம்:

அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர். ஆராய்ந்தால் மறச் செய்கைகளுக்கும் அன்பே துணையிருக்கும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
(77)
விளக்கம்:

எலும்பில்லாத புழுப்பூச்சிகளை, வெயில், காய்ந்து வருத்துவது போல, அன்பிலாதவனை அறமானது காய்ந்து வருத்தச் செய்யும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
(78)
விளக்கம்:

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்தமரம் தளிர்த்தாற்போல் நிலையற்றதாம்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
(79)
விளக்கம்:

உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு கண்ணுக்குத் தெரியும் உடம்பின் புற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்து உடம்பு.
(80)
விளக்கம்:

உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே. அது இல்லாதவர்க்கு எலும்பைத் தோலால் போர்த்திய உடம்பு மட்டுமே ஆகும்.

No comments:

Post a Comment