Tuesday, May 26, 2009

23. ஈகை

23. ஈகை

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
(221)
விளக்கம்:

வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை: பிறர்க்குத் தருவது எல்லாம் எதிர்ப் பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.


நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
(222)
விளக்கம்:

நல்ல அறச்செயலுக்கே என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே: மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
(223)
விளக்கம்:

ஒருவன் வந்து, நான் யாதும் இல்லாதவன் என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
(224)
விளக்கம்:

உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
(225)
விளக்கம்:

பசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும். அதுவும், அப் பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்கப் பிற்பட்டதே ஆகும்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(226)
விளக்கம்:

பலரோடும் பகுந்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையானதாகும்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
(227)
விளக்கம்:

பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.

ஈந்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
(228)
விளக்கம்:

தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள்,பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
(229)
விளக்கம்:

தாம் முயன்று தேடி நிரப் பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலைவிட துன்பம் தருவதாகும்.

சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
(230)
விளக்கம்:

சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை. பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்.

No comments:

Post a Comment