Tuesday, May 26, 2009

21. தீவினை அச்சம்

21. தீவினை அச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
(201)
விளக்கம்:

தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்ச மாட்டார்கள் ; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்.


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்.
(202)
விளக்கம்:

தீயசெயல்கள் பிறர்க்கும் தமக்கம் தீமை விளைவித்தால், தீய செயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்.

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
(203)
விளக்கம்:

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
(204)
விளக்கம்:

பிறனுக்கு கேடு செய்வதனைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது ; நினைத்தால் அப்படி நினைத்தவனுக்கு கேடு செய்ய அறமே நினைக்கும்.

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.
(205)
விளக்கம்:

'இவன் துணையிலன் ' என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும். செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்.

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டா தான்.
(206)
விளக்கம்:

துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன். தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக.

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
(207)
விளக்கம்:

எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்; தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.
(208)
விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துள்ளற்க அடிஉறைந்து அற்று.
(209)
விளக்கம்:

ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒரு போதுமே ஈடுபடாமல் இருப்பானாக.

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்
தீவினை செய்யான் எனின்.
(210)
விளக்கம்:

ஒருவன், தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்.

No comments:

Post a Comment