Tuesday, May 26, 2009

15. பிறனில் விழையாமை

15. பிறனில் விழையாமை

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
(141)
விளக்கம்:

பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை.


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல்.
(142)
விளக்கம்:

நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்.
(143)
விளக்கம்:

சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
(144)
விளக்கம்:

தினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்.

எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
(145)
விளக்கம்:

இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
(146)
விளக்கம்:

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
(147)
விளக்கம்:

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவனின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றே ஆன்ற ஒழுக்கு.
(148)
விளக்கம்:

பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று ; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.
(149)
விளக்கம்:

அச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே 'நன்மைக்கு உரியவர் யார்?' என்றால், பிறருக்கு உரியவனின் தோளைத் தழுவாதவரே ஆவர்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
(150)
விளக்கம்:

அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதவற்றையே செய்தாலும். பிறனுக்கு உரியவனின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்.

No comments:

Post a Comment