18. வெஃகாமை |
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
(171)
விளக்கம்:நடுவுநிலைமை இல்லாமல், பிறந்து நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப்போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.
படுபயன் வெஃகி வழிபடுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
(172)
விளக்கம்:நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான சொல்களைச் செய்யவே மாட்டார்கள்.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
(173)
விளக்கம்:நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்ப மாட்டார்கள்.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
(174)
விளக்கம்:ஐம்புலன்களையும் வென்ற குறையில்லாத அறிவாளர்கள், 'யாம் பொருளில்லாதேம்' என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
(175)
விளக்கம்:ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
(176)
விளக்கம்:அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன்,பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய் விடுவான்.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.
(177)
விளக்கம்:பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்பவேண்டாம்; செயல் அளவில் அதன்பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
(178)
விளக்கம்:ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
(179)
விளக்கம்:அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை,திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்.
இறவீனும் எண்ணாது வெஃகின் விறவீனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
(180)
விளக்கம்:
வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்.
No comments:
Post a Comment