Tuesday, May 26, 2009

12. நடுவு நிலைமை

12. நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
(111)
விளக்கம்:

ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடை பெறுமானால் , 'தகுதி' என்று கூறப்படும் நடுவு நிலைமையும் நல்லதே ஆகும்.


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
(112)
விளக்கம்:

செம்மை உடையவனின் பொருள் வளமையானது. இடையிலே அழிந்து போகாமல்,அவன் வழியினார்க்கும் உறுதியாக நன்மை தரும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
(113)
விளக்கம்:

நன்மையே தருவது என்றாலும் நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கிவிட வேண்டும்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
(114)
விளக்கம்:

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பவற்றால் காணப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
(115)
விளக்கம்:

பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கொணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
(116)
விளக்கம்:

தன் நெஞ்சமானது நடுவு நிலையிலிருந்து விலகி, தவறு செய்பவன், யான் இதனால் கெடுவேன் என்பதனையும் அறிந்து கொள்வானாக.

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
(117)
விளக்கம்:

நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
(118)
விளக்கம்:

தன்னைச் சமனாகச் செய்துகொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
(119)
விளக்கம்:

உள்ளத்திலே கோணுதலற்ற பண்பை ணிடிவாகப் பெற்றிருந்ததால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தம்போற் செயின்.
(120)
விளக்கம்:

பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.

No comments:

Post a Comment