Showing posts with label 97. மானம். Show all posts
Showing posts with label 97. மானம். Show all posts

Sunday, May 31, 2009

97. மானம்

இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்.
(961)
விளக்கம்:

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.


சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
(962)
விளக்கம்:

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்யமாட்டார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
(963)
விளக்கம்:

உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும். செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
(964)
விளக்கம்:

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையை விட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.
(965)
விளக்கம்:

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்.

புகழின்றால் புத்தணோட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
(966)
விளக்கம்:

தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது, மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது. அதனால் என்ன பயன்?

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
(967)
விளக்கம்:

தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர் வாழ்தலைவிட இறந்தவன் என்று சொல்லப்படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.

மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.
(968)
விளக்கம்:

தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல் மானம் விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பணிக்கு ஏற்ற மருந்தாகுமோ

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
(969)
விளக்கம்:

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.

இனிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
(970)
விளக்கம்:

தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிரை விட்டுவிட்ட மானமுள்ளவரது புகழ் வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்.