Showing posts with label 13. அடக்கமுடைமை. Show all posts
Showing posts with label 13. அடக்கமுடைமை. Show all posts

Tuesday, May 26, 2009

13. அடக்கமுடைமை

13. அடக்கமுடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய் த்து விடும்.
(121)
விளக்கம்:

அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும். அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்.


காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு.
(122)
விளக்கம்:

அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக்காத்து வருக: உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
(123)
விளக்கம்:

அறியவேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
(124)
விளக்கம்:

தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே மாணப் பெரிது.
(125)
விளக்கம்:

பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும். அவருள்ளும் செல்வர்க்கு அதுவும் ஒரு செல்வத்தைப் போன்ற சிறப்பினதே ஆகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து .
(126)
விளக்கம்:

ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
(127)
விளக்கம்:

எவற்றைக் காக்காதவராயினும் தம் நாவைத் தவறாமல் காக்க வேண்டும். காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
(128)
விளக்கம்:

தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையுமே இல்லாமற் போய்விடும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
(129)
விளக்கம்:

தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறி விடும். ஆனால் நாவினாலே சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
(130)
விளக்கம்:

சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்.