Showing posts with label 44. குற்றம் கடிதல். Show all posts
Showing posts with label 44. குற்றம் கடிதல். Show all posts

Sunday, May 31, 2009

44. குற்றம் கடிதல்

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
(431)
விளக்கம்:

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.


இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
(432)
விளக்கம்:

ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்.

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
(433)
விளக்கம்:

பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்.

குற்றமே காக்க பொருளாக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
(434)
விளக்கம்:

தனக்கு முடிவைத்தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே, குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக்கொள்க.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
(435)
விளக்கம்:

குற்றம் வரும் முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது,நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
(436)
விளக்கம்:

தன் குற்றத்தையும் வராமல் நீக்கி, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்.

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
(437)
விளக்கம்:

செல்வம் பெற்றபோது அதனாலே செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.
(438)
விளக்கம்:

செல்வத்தின் மேல் பற்றுக்கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
(439)
விளக்கம்:

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களை ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
(440)
விளக்கம்:

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்.