Showing posts with label 48. வலியறிதல். Show all posts
Showing posts with label 48. வலியறிதல். Show all posts

Sunday, May 31, 2009

48. வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
(471)
விளக்கம்:

செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்.


ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
(472)
விளக்கம்:

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிங்கிச்
இடைக்கண் முரிந்தார் பலர்.
(473)
விளக்கம்:

தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்துபோனவர்கள் உலகிற் பலராவர்.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
(474)
விளக்கம்:

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனுமாகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவில் கெடுவான்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
(475)
விளக்கம்:

மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.
(476)
விளக்கம்:

மரத்தின் நுனிக் கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால், அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
(477)
விளக்கம்:

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
(478)
விளக்கம்:

வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
(479)
விளக்கம்:

தன்னடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
(480)
விளக்கம்:

தன்னடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும்.