Showing posts with label 107. இரவச்சம். Show all posts
Showing posts with label 107. இரவச்சம். Show all posts

Sunday, May 31, 2009

107. இரவச்சம்

கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.
(1061)
விளக்கம்:

தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண் போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
(1062)
விளக்கம்:

முயற்சி செய்து உயிர்வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர்வாழ்தலை இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானானால் அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக.

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
(1063)
விளக்கம்:

வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை.

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
(1064)
விளக்கம்:

நுகர்பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும் பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மன அமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.

தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
(1065)
விளக்கம்:

நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப்போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே ஆனாலும், அதனை உண்பதைவிட இனியது வேறு யாதும் இல்லை.

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
(1066)
விளக்கம்:

தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும் கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதை விட இழிவானது வேறொன்றுமில்லை.

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
(1067)
விளக்கம்:

கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
(1068)
விளக்கம்:

வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும்போது, இடையிலே கரத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும்.

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
(1069)
விளக்கம்:

இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும். அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால் அந்த உருக்கமும் காய்ந்து போகும்.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
(1070)

விளக்கம்:

ஒளிப்பவர் "இல்லை" என்று சொன்னதுமே இரப்பவர் உயிர் போய்விடுகிறது. ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ?