Showing posts with label 123. பொழுதுகண்டு இரங்கல். Show all posts
Showing posts with label 123. பொழுதுகண்டு இரங்கல். Show all posts

Sunday, May 31, 2009

123. பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்ல மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
(1221)
விளக்கம்:

பொழுதே, நீ மாலைக் காலமே அல்ல. காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும்முடிவுக் காலமே ஆவாய்.


புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
(1222)
விளக்கம்:

மயங்கிய மாலைப் பொழுதே, எம்மைப்போலவே நீயும் துன்பமுற்று தோன்றுகிறாய். நின் துணையும் என் காதலரைப் போலவேஇரக்கம் இல்லாதவரோ?

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
(1223)
விளக்கம்:

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போதுவருகின்றது போலும்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
(1224)
விளக்கம்:

காதலர் அருகே இல்லாதபோது கொலை செய்யும் இடத்தில் ஆறலைப்பார் வருவதைப்போல், இம் மாலையும் என் உயிரைக்கொல்வதற்காகவே வருகின்றதே.

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
(1225)
விளக்கம்:

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான்செய்த தீமையும் யாதோ?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.
(1226)
விளக்கம்:

மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை காதலர் என்னைவிட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான்அறியவே இல்லையே.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
(1227)
விளக்கம்:

காலையில் அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து மாலைப்பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றதே,இந்தக் காலமாகிய நோய்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
(1228)
விளக்கம்:

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும்படையாக வருகின்றதே.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
(1229)
விளக்கம்:

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே இந்த ஊரும் மயங்கியதாய் என்னைப் போலத்துன்பத்தை அடையும்.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
(1230)
விளக்கம்:

பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகமால் நின்ற என் உயிரானது இம் மாலைப்பொழுதிலே நலிவுற்று மாய்கின்றதே.