Showing posts with label 69. தூது. Show all posts
Showing posts with label 69. தூது. Show all posts

Sunday, May 31, 2009

69. தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
(681)
விளக்கம்:

தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள்.


அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
(682)
விளக்கம்:

தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும் தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள்.

நூலாறுள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
(683)
விளக்கம்:

அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள்.

அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
(684)
விளக்கம்:

இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவரச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான்.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.
(685)
விளக்கம்:

விரிக்காமல் தொகுத்து சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுபைடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பனே தூதன்.

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
(686)
விளக்கம்:

கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன்.

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான் தலை.
(687)
விளக்கம்:

தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற்கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாக சிந்தித்து சொல்பவனே தூதன்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
(688)
விளக்கம்:

நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு.

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
(689)
விளக்கம்:

தன் அரசன் சொல்லியனுப்பிதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும்.

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
(690)
விளக்கம்:

தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவு படாது, தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டைச் செய்து முடிப்பவனே தூதன்.