Showing posts with label 50. இடன் அறிதல். Show all posts
Showing posts with label 50. இடன் அறிதல். Show all posts

Sunday, May 31, 2009

50. இடன் அறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.
(491)
விளக்கம்:

பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்ட பின் அல்லாமல், எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்; அவர் வலிமையை இகழாமலும் இருக்க வேண்டாம்.


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
(492)
விளக்கம்:

மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
(493)
விளக்கம்:

தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பார்.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
(494)
விளக்கம்:

தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருக்கிச் செய்தாரானால், அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
(495)
விளக்கம்:

ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரைவிட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
(496)
விளக்கம்:

நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.
(497)
விளக்கம்:

செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து, தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
(498)
விளக்கம்:

சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
(499)
விளக்கம்:

கடக்க ணிடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்.

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
(500)
விளக்கம்:

போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும்.