Showing posts with label 2. வான் சிறப்பு. Show all posts
Showing posts with label 2. வான் சிறப்பு. Show all posts

Tuesday, May 26, 2009

2. வான் சிறப்பு

2. வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
(11)
விளக்கம்:

மழை பெய்வதனாலேயே உலக உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
(12)
விளக்கம்:

உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.

விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
(13)
விளக்கம்:

மழை காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற இப் பரந்த உலகில் பசி நிலைத்து நின்று உயிர்களை வாட்டும்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
(14)
விளக்கம்:

மழை என்னும் வருவாயின் வளம் குறைந்தால், பயிர் செய்யும் உழவரும் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
(15)
விளக்கம்:

காலத்தில் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை. அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது.
(16)
விளக்கம்:

வானிலிருந்து மழைத்துளி வீழ்வது நின்றுவிட்டால், உலகில் பசும்புல்லின் தலையைக் காண்பதுகூட அரிதாகிவிடும்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
(17)
விளக்கம்:

மேகமானது கடல்நீரை முகந்து சென்று மீண்டும் மழையாகப் பெய்யவிட்டால், அப்பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
(18)
விளக்கம்:

மழை முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்தில் வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
(19)
விளக்கம்:

மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்தில் பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டும் நிலையாமற் போய்விடும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்நின்று அமையாது ஒழுக்கு.
(20)
விளக்கம்:

நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.