Showing posts with label 55. செங்கோன்மை. Show all posts
Showing posts with label 55. செங்கோன்மை. Show all posts

Sunday, May 31, 2009

55. செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
(541)
விளக்கம்:

நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.


வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
(542)
விளக்கம்:

மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும். மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
(543)
விளக்கம்:

அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோண்மையே ஆகும்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
(544)
விளக்கம்:

குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து, வாழ்வும் நிலைபெறுவதாகும்.

இயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்
பெயலும் விளையுளும் தொக்கு.
(545)
விளக்கம்:

அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.
(546)
விளக்கம்:

மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்ததானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
(547)
விளக்கம்:

உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.

எண்பதத்தான் ஓரா ணிறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
(548)
விளக்கம்:

ணிறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய் அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து ணிறை செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலேயே சென்று தானே கெடுவான்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
(549)
விளக்கம்:

குடிகளைப் பகைவர்களிடத்தில் இருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால், வேந்தனுக்கு குற்றம் இல்லை. அதுவே அவன் தொழில்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
(550)
விளக்கம்:

கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும், மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.